• புதிய மின்னூல்

  Thursday, 2 March 2017

  பட்டினத்தடிகளின் பாடல்கள் மின்னூல் PDF | Tamil Ebook Download

  பட்டினத்தார் நம் தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வராவார். கடலோடி பொருள்தேடும் வைசிய குலத்து அவதரித்த செல்வர். வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து, இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன்வர கால் போன போக்கில் நடக்கலானார். “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” எனும் பொன்னான போதனையை உளத்தில் கொண்டு, அதுவே சத்தியம், அதுவே இறைவன் நமக்களித்த வரம் என்று உணர்ந்து அதனை ஒரு ஓலை நிறுக்கில் எழுதிப் போட்டுவிட்டுத் தன் கால் போன போக்கில் செல்லத் துவங்கினார்.
  பட்டினத்தடிகளின் பாடல்கள் 
  ஊர் ஊராய்ச் சென்று சிவதரிசனம் செய்து, யாக்கை நிலையாமை, பூமியில் சிற்றின்பக் கேணியில் மூழ்கிக் கிடந்து இறைவன் அருள் எனும் பேரருள் பெருங்கடலை மறந்த மக்களுக்கு இடித்துரைப்பது போல் உண்மைகளை உணரவைக்கும் பாடல்களைப் பாடிக் கொண்டு பரதேசியாத் திரிந்தார். உள்ளத்தை மெல்ல வருடிக் கொடுத்து உண்மைகளை மெல்லப் புகட்டும் பழைய பாதையை விட்டு நீங்கி, உள்ள உண்மையை போட்டு உடைத்து நம் கண் முன்னே பாதை தெரியுது பார் என்று உந்தித் தள்ளும் பாடல்கள் அவை.

  போலித்தனமும், பொய்மையும், சுயநலமும், நிரந்தரமில்லா சிற்றின்பமும் வாழும் முறைக்கு ஏற்றதல்ல, ஈசன் இணையடி நிழலே நாம் வேண்டும் நிரந்தர பேரின்பம் என்பதை பறைசாற்றும் பாடல்கள் அவை. சொல்லுகின்ற சொல் கடுமையாய், உள்ளத்தைச் சுடும்படியாய், உள்ளதை உள்ளபடி கேட்கக் கூசினாலும் அதுவே முற்றிலும் உண்மை என்பதை உணரச் செய்யும் பாடல்கள்.

  மனதுக்கும், செவிக்கும், கண்களுக்கும் தற்காலிக இன்பம் சேர்க்கும் கலை போலன்றி பட்டினத்தார் பாடல்கள் உண்மையை விண்டுரைக்கும் சத்திய வாக்கு என்பதால், மருந்து கசக்குமென்றாலும், உண்மை சுடும் என்றாலும், பிறவிப் பேற்றுக்கு அதுவே மருந்து என்பதால் பட்டினத்தார் சொற்களை விரும்பிப் படிக்க வேண்டும். இது அந்த நோக்கத்துக்காகச் செய்யப்பட்ட ஒரு எளிய முயற்சி. படித்தபின் கருத்தைப் பதிவு செய்யுங்கள். நன்றி.

  அன்பன்,
  தஞ்சை வெ. கோபாலன்

  No comments:

  Post a Comment

  Upload